கும்பகோணம்: மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில்! - பெண்கள் உட்பட மூவர் கைது

மசாஜ் சென்டர் போர்வையில் இளம்பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தவர்களை போலீஸார் கைதுசெய்தனர்.

Published:Updated:
கைதான இளைஞர் மணிகண்டன்
கைதான இளைஞர் மணிகண்டன்
0Comments
Share

கும்பகோணம் அருகே இரண்டு இடங்களில் மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் பாலியல் தொழில் நடந்துவந்திருக்கிறது. இது தொடர்பாக இரண்டு பெண்கள் உட்பட மூன்று பேரை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். பிரசித்தி பெற்ற கோயிலுக்கு அருகிலேயே மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில் நடந்துவந்தது தெரிந்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

விசாரணையில் போலீஸ் டீம்
விசாரணையில் போலீஸ் டீம்

கும்பகோணம், திருவிடைமருதூர் பகுதிகளில் பாலியல் தொழில் அதிகளவில் நடப்பதாகத் தொடர்ந்து போலீஸாருக்குப் புகார் வந்திருக்கிறது. குறிப்பாக வீட்டை வாடகைக்கு எடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பாலியல் தொழில் செய்துவருவதாக போலீஸ் தரப்புக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவிடைமருதூர் பகுதியிலுள்ள ஐந்துதலைப்பு வாய்க்கால் அருகில் மசாஜ் சென்டர் நடத்துவதாகக் கூறி வீட்டை வாடகைக்கு எடுத்து பாலியல் தொழில் நடத்தி வந்திருக்கின்றனர். அதை போலீஸார் உறுதி செய்திருக்கின்றனர்.

இதையடுத்து, திருவிடைமருதூர் டி.எஸ்.பி ஜாபர் சித்திக் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ராஜேஷ், நாகலட்சுமி உள்ளிட்ட போலீஸ் குழுவினர் அந்த மசாஜ் சென்டருக்குச் சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். மசாஜ் சென்டரில் ஆண்களுக்கு பெண்கள் மசாஜ் செய்யக் கூடாது என்பது விதி. ஆனால், அதையும் மீறி அங்கு ஆண்களுக்குப் பெண்கள் மசாஜ் செய்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதேபோல் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற கோயில் ஒன்றுக்கு அருகிலேயே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து `கலர்ஸ்' என்ற பெயரில் மசாஜ் சென்டர் நடத்திவந்திருக்கின்றனர். அதில் மசாஜ் சென்டர் போர்வையில் பாலியல் தொழில் நடந்துவந்ததாகச் சொல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸ் டீம் `கலர்ஸ்' மசாஜ் சென்டரில் சோதனை நடத்தினர். இதில் இரண்டு பெண்கள் உட்பட பாலியல் தொழிலுக்கு புரோக்கராகச் செயல்பட்ட இளைஞர் ஒருவரையும் போலீஸார் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்ட புரோக்கர் மணிகண்டன் (24) திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதியைச் சேர்ந்தவர். மசாஜ் சென்டர் பெயரில் விசிட்டிங் கார்டு அச்சடித்து வைத்திருந்த அவர் அதைப் பலரிடம் கொடுத்திருக்கிறார். அத்துடன் பெண்களை மசாஜ் சென்டருக்கு அழைத்துவந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியிருக்கிறார். பல ஆண்கள் அந்த மசாஜ் சென்டருக்கு வந்து சென்றிருக்கின்றனர். கோயில் நகரத்தில் மசாஜ் சென்டர் பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரிந்து பலரும் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர்.

கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்
கைதுசெய்யப்பட்ட மணிகண்டன்

இதையடுத்து, கும்பகோணம் மேற்கு, திருவிடைமருதூர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். அத்துடன் மணிகண்டனை சிறையில் அடைத்ததுடன் பெண்கள் இருவரையும் தஞ்சாவூரிலுள்ள அரசு பெண்கள் பாதுகாப்பு மையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்துப் பேசிய டி.எஸ்.பி ஜாபர் சித்திக், ``இரண்டு மசாஜ் சென்டர்களும் அதை நடத்துவதற்கு உரிய அரசு அனுமதி பெறவில்லை. அத்துடன் ஆன்லைன் மூலம் பணம் வாங்கிக்கொண்டு பாலியல் தொழில் நடந்திவந்திருக்கின்றனர். இது தொடர்பாக மூன்று பேரைக் கைதுசெய்திருக்கிறோம். மேலும் விசாரணை தொடர்ந்து வருகிறது" எனத் தெரிவித்தார்.